தமிழ்நாடு

தியாகிகளை தேடிப்பிடித்து ஓய்வூதியம் தர வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

தியாகிகளை தேடிப்பிடித்து ஓய்வூதியம் தர வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

webteam

தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல், அவர்களை தேடிப்பிடித்து அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி பி.எஸ்.பெரியய்யா (91). இவர் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றவர். இவர் தமிழக அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு பெரியய்யா மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இவரது மனுவை நிராகரித்து மதுரை மாவட்ட ஆட்சியர் 24.12.2013 அன்று உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை ரத்து செய்து, மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக்கோரி பெரியய்யா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்த போதே பெரியய்யா இறந்தார். பின்னர் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கை தொடர்ந்து நடத்தினர். மனுவை விசாரித்து, பெரியய்யாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி 28.4.2017-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய உள்துறை செயலர் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். அதில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு மனுதாரர், சிறையில் இருந்ததற்காக சக சிறை கைதிகள் இருவர் அளித்த சான்றிதழ் திருப்தியாக இல்லை. அப்படியிருக்கும் போது சட்டப்படி அவருக்கு மத்திய அரசுக்கான தியாகிகள் ஓய்வூதியம் வழங்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சார்பில் சட்டப்பூர்வ வாரிசுகள் ஓய்வூதியம் கேட்டு வழக்குத் தொடர முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு “சுதந்திரப் போராட்ட தியாகி பெரியய்யா மாநில அரசின் தியாகி ஓய்வூதியம் பெற்று வருகிறார். இதனால் அவரது சுதந்திரப் போராட்ட பங்கேற்பை கேள்வி கேட்க முடியாது. மனுதாரர் சிறையில் இருந்ததற்கு சக கைதிகள் இருவர் சான்றிதழ் அளித்துள்ளனர். அதில் ஒருவரின் சான்றிதழ் தான் திருப்தியாக இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மற்றொருவரின் சான்றிதழ் திருப்தியாக இருக்கும் போது, அதை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்கியிருக்க வேண்டும். மத்திய அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பெரியய்யாவுக்கு மத்திய அரசு தியாகி ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான விண்ணப்பத்தை மதுரை ஆட்சியர் 4 வாரத்தில் தமிழக அரசுக் வழங்க வேண்டும். தமிழக அரசு அதை 6 வாரத்தில் மத்திய அரசுக்கும் பரிந்துரைக்க வேண்டும். மத்திய அரசு 8 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல், அவர்களை தேடிப்பிடித்து அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்”  என்று உத்தரவிட்டனர்.