தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு: விசாரணையை 6 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு: விசாரணையை 6 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

jagadeesh

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்தில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தில் உயிரிழந்தஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர். இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிபிசிஐடி முதலில் விசாரித்த நிலையில், தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து எடுத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 8க்கும் அதிகமான முறை விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உறவினரின் செல்போன் மூலமாக யாரிடமோ பேசி, 36 லட்சம் ரூபாயை வழங்கி விடுமாறு மிரட்டிக் கொண்டிருந்தார்.

இது தொடர்பாக நீதித்துறை நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். அன்றைய தினமே குற்றவாளிகள் பாதுகாப்பு காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களை மிரட்டியதோடு, மோசமான வார்த்தைகளில் அவர்களை திட்டினர். பணபலம், ஆள்பலம் காரணமாக சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்புள்ளது. ஆகவே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், கீழமை நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.