madurai high court bench x page
தமிழ்நாடு

”வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக்கூடாது” - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நீதிமன்றம் உத்தரவிட்டபடி கடன் தொகையை செலுத்திய பின்னரும், ஆவணங்களை வழங்க மறுப்பதாகவும், தனது அடமான சொத்து ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

PT WEB

தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த மாரித்துறை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தொழில் செய்வதற்காக கரூர் வைசியா வங்கியில் 39 லட்சத்து 74 ஆயிரத்து 523 ரூபாயை கடனாக பெற்றேன். அதற்கான வட்டி மற்றும் அசல் தொகையை முறையாக செலுத்தி வந்த நிலையில், கோவிட் பெருந்தொற்றின் போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முறையாக செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், வங்கியில் அடமானமாக கொடுத்த சொத்தை ஜப்தி செய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியது. இதனால் நீதிமன்றத்தை நாடிய போது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதிக்குள் 7லட்ச ரூபாயையும், பின்பு மீத தொகையை 4 தவணைகளாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Karur Vysya Bank

அதன்படி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதிக்குள் மொத்த கடன் தொகையும் செலுத்தி விட்டேன். பின்னர் வங்கியை அணுகி சொத்து அடமான ஆவணங்களை தருமாறு கூறிய போது, மேலும் கூடுதலாக பணத்தை செலுத்தினால்தான் ஆவணங்களை வழங்க இயலும் என தெரிவித்துவிட்டனர். இது ஏற்கத்தக்கது அல்ல.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செலுத்த வேண்டிய அனைத்து தொகையும் செலுத்திய பின்னரும், எனது ஆவணங்களை திரும்ப வழங்காமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே எனது மனுவின் அடிப்படையில் என்னிடம் இருந்து அடமானமாக பெற்ற ஆவணங்களை வழங்க கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "நீதிமன்றம் உத்தரவிட்டபடி அனைத்து தொகையையும் செலுத்திய பின்னரும், வங்கியில் இருந்து கூடுதலாக 5 லட்ச ரூபாயை செலுத்தினால்தான் ஆவணங்களை வழங்க முடியும் என தெரிவித்துவிட்டனர், என குறிப்பிட்டு உத்தரவு நகலை வழங்கினார்.

அதனை பார்த்த நீதிபதிகள், "கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தனர். பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, "கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமார் நேரில் ஆஜராகினார். ஆவணங்களை எப்போது வழங்க இயலும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு திங்கட்கிழமை வழங்குவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

madurai high court bench

இதனையடுத்து நீதிபதிகள், "மனுதாரரிடம் இருந்து அடமானமாக பெற்ற அனைத்து ஆவணங்களையும் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 11 மணிக்கு மனுதாரரின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்க வேண்டும். ஆவணங்களுடன் தடையில்லா சான்றையும் வழங்க வேண்டும்.

மேலும் சொத்தை வங்கியின் பெயரில் பதிவு செய்ததை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை மேலாளரை முன்னெடுக்க வேண்டும். அகந்தையுடன் நடந்து கொண்ட கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை ஆவணங்களை ஒப்படைக்கும் அன்றே மனுதாரரிடம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என கடிந்து கொண்டனர்.