தமிழ்நாடு

சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

rajakannan

நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகாரில், சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்துள்ளது.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உதித் சூர்யாவிற்கு எதிராக இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

அதே சமயம் அரசுத்தரப்பில், “மாணவரும், அவரது தந்தையும் தலைமறைவாக உள்ளனர். இன்னமும் கைது செய்யப்படவில்லை. மாணவர் மும்பையில் நீட் தேர்வு எழுதிய நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. உதித் சூர்யா கலந்தாய்வில் கலந்து கொண்டதே சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “கல்லூரியில் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது மாணவர் ஆஜராகினார்.  யாருடையது என அறியப்படாத ஒரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து இது போல குற்றச்சாட்டு வந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது. மனுதாரரே கலந்தாவில் கலந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “நீட் தேர்வில் இது போல முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டால் அது எளிதாக கடந்து செல்லக்கூடிய விசயம் அல்ல” என தெரிவித்தார். தொடர்ந்து, மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பாக ஒருநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க முடியுமா? என மனுதாரர் தரப்பிலும், வழக்கு  சிபிசிஐடியிடம் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் முழுமையாக எப்போது சிபிசிஐடியிடம் வழங்கப்படும் என அரசுத்தரப்பிலும் கேட்டுத்தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை 2.15 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மீண்டும், விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதி பரிந்துரை செய்தார். வழக்கில் போதிய முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதி, சிபிசிஐடி முன் உதித் சூர்யா ஆஜரானால் முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக விசாரிக்க தயார் என்றும் கூறினார்.