உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாதது உட்பட விதிமீறல் ஏதும் நடைபெற்றதா? என்பது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த தென்னரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுவாக எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளின் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உதவி காவல் ஆய்வாளருக்கான தேர்வுகள் கடந்த ஜனவரி 12 13-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேர்வானவர்களில் பலர் குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் படித்துள்ளனர். கடலூர் ஆகாஷ் பயிற்சி மையத்தில் படித்த பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிகரம் பயிற்சி மையத்தில் படித்து ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பல தேர்வு அறைகளில் தேர்வர்கள் பார்த்து எழுத அனுமதித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மார்ச் மாதம் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் பணியிடம் தொடர்பான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கவேண்டும். மேலும் ஜனவரி 12, 13ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "தேர்வு ஜனவரி மாதம் 12,13 ஆம் தேதிகளில் நடைபெற்று, தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், 4 மாதங்கள் தாமதமாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில், ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள்," ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறுவது எப்படி முறைகேடாகும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் தேர்வு மையங்களில் சிசிடிவி வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு விதிமீறல்கள் ஏதும் நடைபெற்றதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி," சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாதது உட்பட உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் விதிமீறல் ஏதும் நடைபெற்றதா? என்பது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.