தேர்தல் அறிக்கை அடிப்படையில், 2021-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிப்படி டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோவிலோ, கல்வி நிறுவனங்களோ இருக்க கூடாது.
ஆனால், பள்ளியக்கரஹாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே, பேருந்து நிலையம், மாநகராட்சி அரசுப்பள்ளியும், விட்டல் மெட்ரிகுலேசன் பள்ளியும், பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும். ஆகவே, பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதே போல டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜரானார். அரசுத்தரப்பில் தமிழகத்தில் 2 கட்டங்களாக 1000 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சந்தேகம் எழும் பட்சத்தில் 21 வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்கான சான்றை சரிபார்க்கவும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அத்துடன் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்திலேயே குறைவான நேரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மது விற்பனை குறைந்துள்ளது. மது விலை உயர்வால்தான், வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி வருவாய் அதன் காரணமாகவே அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் குடிநோயாளிகள் அதிகமாக உள்ளனர். தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுமா? எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் பார்களை நிரந்தரமாக மூட வேண்டும். அது போல தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக திறக்கக்கூடாது எனக் கூறினர். மேலும் தமிழகத்தில் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன? டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க முடியுமா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.