தமிழ்நாடு

‘கைகளை கட்டி மன்னிப்பு’ : முன் ஜாமின் வழங்க நூதன நிபந்தனை

‘கைகளை கட்டி மன்னிப்பு’ : முன் ஜாமின் வழங்க நூதன நிபந்தனை

webteam

காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்ட நபருக்கு, சார்பு ஆய்வாளர் முன் கைகட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

நெல்லை மாவட்டம் திருகுறுங்குடி அருகே நம்பிகோவில் சாலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த காரை காவலர்கள் மறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டுநர் செந்தில், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. காரிலும் மது பாட்டில்கள் இருந்தன. 
இதையடுத்து காரில் வந்தவர்களுக்கும், காவல் சார்பு ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

இதைத்தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செந்தில் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஐந்தாவதாக சேர்க்கப்பட்ட இராஜராஜன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இராஜராஜன்  திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு சென்று, சம்மந்தப்பட்ட  சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னி கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் .