செய்தியாளர்: பிரசன்னா
மதுரை மாநகரில் அண்மைக்காலமாக, அனுமதி பெறாது விதிமீறலாக வைக்கப்படும் ராட்சத விளம்பர பேனர்கள் பொதுமக்களின் உயிருக்கு நேரடி அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. முக்கியமாக நகரின் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வர்த்தக வளாகங்களுக்கு அருகிலும், இந்த பேனர்கள் அதிகமாக காணப்படுகின்றன. இத்தகைய பேனர்கள் பெரும்பாலும் அரசியல், திருமணம், வணிக விளம்பரங்கள் போன்றவற்றிற்காக வைக்கப்படுகின்றன. தரமற்ற கம்பிகளை பயன்படுத்தியும், சட்டென கிழிந்து போகும் துணி வகைகளாலும் இந்த பேனர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் இந்த பேனர்கள் கீழே விழுந்து பாதிப்பை ஏற்படுகின்றன.
ராட்சத பேனர்களால் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பே, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். நகரின் முக்கிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர் அவர்கள். பேனர் பிரச்சினை குறித்து மதுரை குறித்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது புதிய தலைமுறை. அனுமதி இன்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தனர் மாநகராட்சி அதிகாரிகள்..