தமிழ்நாடு

மதுரை: குழந்தை இறந்ததாக போலி ஆவணம்; காப்பகத்தில் போலீசார் விசாரணை

மதுரை: குழந்தை இறந்ததாக போலி ஆவணம்; காப்பகத்தில் போலீசார் விசாரணை

kaleelrahman

மதுரையில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் காப்பகத்தில், குழந்தை இறந்ததாக நாடகமாடிய விவகாரத்தில், போலியான ஆவணங்களை கைப்பற்றிய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் இயங்கிவரும் இதயம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் முதியோர் காப்பகத்தில் இருந்த ஒருவயது ஆண் குழந்தை இறந்ததாகவும், அந்தக் குழந்தையை மதுரை தத்தநேரி மயானத்தில் அடக்கம் செய்ததாக அறக்கட்டளை சார்பில் கொடுக்கப்பட்ட மயான ரசீது மோசடியாக தயாரித்தது அம்பலமானது.

கடந்த மாதம் 16-ஆம் தேதி இதே இதயம் அறக்கட்டளையில் ஆதரவற்று இருந்த 75 வயது மதிப்புடைய கணேசன் என்ற முதியவர் வயது முதிர்வு காரணமாக இறந்த நிலையில் அவரை அடக்கம் செய்த ரசீதை, தேதி மற்றும் பெயர்களை மாற்றி நேற்று மாணிக்கம் என்ற ஒருவயது குழந்தையை அடக்கம் செய்ததாக ஆவணங்களை காட்டி மோசடி செய்தது தெரியவந்தது.

குழந்தை உண்மையிலேயே உயிரிழந்ததா அல்லது பணத்திற்காக வேறு யாருக்கும் விற்கப்பட்டதா என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ள ஆவணத்தின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் ஆதரவற்றோர் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்ட குழந்தை காணவில்லை என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் துறையினர், இதயம் அறக்கட்டளையினர் குழந்தை தொடர்பாக முறையான தகவல்களை அளிக்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார ஆய்வாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் மதுரை நரிமேடு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மதுரை தத்தநேரி மாநகராட்சி மயானம் சார்பில் தங்களது ஆவணங்களை போன்று போலியான ஆவணங்களை சம்பந்தப்பட்ட அறக்கட்டளை நிர்வாகம் தயாரித்து உள்ளதாக காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக மதுரை மாநகராட்சியின் தலைமை மருத்துவ அதிகாரி குமரகுருபரன் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளார்.