தமிழ்நாடு

மதுரை: கொரோனா குறைந்தபின்பு ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு

மதுரை: கொரோனா குறைந்தபின்பு ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு

kaleelrahman

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக தமிழக அரசு ஜனவரி 10-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஜனவரி 10ஆம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 300 வீரர்கள், 150 பார்வையாளர்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள், மாடு வளர்ப்போர் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும் இந்த அரசாணையில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விழாக்காலங்களில் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்ததை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.' என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.