தமிழ்நாடு

நாளை மீன், இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது: மதுரை ஆட்சியர் உத்தரவு

webteam

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை மாவட்டத்தில் நாளை மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மளிகைக் கடைகள், பால் பூத், இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகள் ஆகியவை நேரக்கட்டுப்பாட்டுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகளுக்கு வரும் நபர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை, 1323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான மதுரையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டம் ரெட் அலர்ட் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி திறக்கப்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.