தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழா ரத்து; கள்ளழகர் வைபவ நிகழ்வு குறித்து இன்று அறிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழா ரத்து; கள்ளழகர் வைபவ நிகழ்வு குறித்து இன்று அறிவிப்பு!

webteam

கொரோனோ ஊரடங்கு காரணமாக மதுரையின் வரலாற்று சிறப்பு மிக்க சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரையின் வரலாற்று சிறப்புமிக்க விழாவான சித்திரை திருவிழா முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 2-ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்வும், மே 4-ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 5ஆம் தேதி திரு தேரோட்டமும், விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 7-ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் சித்திரை திருவிழா வழக்கமான முறையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனோ ஊரடங்கு உத்தரவு காரணமாக வரும் 25-ம் தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் அறிவித்துள்ளார்.

மேலும் திருக்கல்யாண நிகழ்வை நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைப்பார்கள் எனவும் இந்த திருக்கல்யாண நிகழ்வினை www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கள்ளழகர் புறப்பாடு மற்றும் மே7-ம் தேதி நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்வு நடைபெறுவது குறித்து கள்ளழகர் கோயில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.