தமிழ்நாடு

பேரறிவாளர் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது - வைகோ குற்றச்சாட்டு

பேரறிவாளர் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது - வைகோ குற்றச்சாட்டு

kaleelrahman

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது தூக்கு தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து அவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கினர். உடனே மாநில அரசு மூன்றே நாளில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநரிடம் அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதை குப்பையில் போட்டுவிட்டார். தற்போது தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்வதற்கு, மத்திய அரசு தடையாக இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூக நீதியை கெடுக்கும் என்ற அதிமுகவினரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சமூக நீதியை பாதுகாப்பதற்காக தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம். ஏற்கெனவே உள்ள அர்ச்சகர்களின் உரிமைகளை பரிப்பதாக அல்ல. இது இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய சமூகநீதி ஆகும்” என்றார்.

கொடநாடு கொலை குறித்து மறுவிசாரணை செய்யக்கூடாது என அதிமுகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு, “கொடநாடு கொலை என்பது அப்பட்டமான, படுபயங்கரமான திட்டமிட்ட படுகொலையாகும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கனகராஜ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர், அங்கே பணம், ஆவணங்கள் மற்றும் நகைகள் எவ்வளவு இருந்தது என்பதையும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே கொலை, கொள்ளை இரண்டும் அங்கு நடந்துள்ளது” என்றார்.