முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  PT WEB
தமிழ்நாடு

மதுரை | முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு – காரணம் என்ன?

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் செய்வதாக அறிவித்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன் முன்னிலையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி

முன்னதாக திண்ணைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி இருப்பதாகவும் மேடையமைத்து பேச அனுமதி இல்லை. அதனால் மேடையை எடுத்து விடுங்கள் என காவல் ஆய்வாளர் கூறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியபோது...

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு:

சாலையோர கூட்டத்தில் எத்தனையோ நெருக்கடி உள்ள நிலையில், உங்களுக்காகதான் இந்த திண்ணை பிரச்சாரம். விடியல் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். இன்றைக்கு சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகிய சிறுமி விவகாரத்தை மீடியாவில் பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

cm stalin

ஆனால், சிபிஐ விசாரணை நடத்தக் கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞருக்கு 1.50 கோடி பணம் கொடுக்கிறது. யார் வீட்டு பணம்.? சிறுமிக்கு நீதி கிடைக்க கூடாது என 1.50 கோடி செலவு செய்திருக்கிறார். அந்த பணத்தில் சிறுமிக்கு ஏதாவது செய்திருக்கலாம் என்று முன்னாள் ;அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், உள்ளிட்ட நான்கு பிரிவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.