model image chat gpt
தமிழ்நாடு

வன்கொடுமை வழக்கு ரத்து? மதுரை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. காவல்துறை சொல்வது என்ன?

மதுரை கம்பூர் ஊராட்சிச் செயலாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் தந்துள்ள விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

PT WEB

மதுரை மாவட்டம் கம்பூர் ஊராட்சியில், தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பெண்மணி ஒருவர், சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கம்பூர் ஊராட்சிச் செயலாளர் ரூபா, இரட்டை டம்ளர் முறையைப் பின்பற்றச் சொல்வதாகவும், சாதியைக் குறிப்பிட்டு அவமதித்ததாகவும், செருப்பைக் கையால் எடுத்துவரச் சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரூபா மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஊராட்சிச் செயலாளர் ரூபா பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

PRESS RELEASE

இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புகாரில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் ஊராட்சி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், குறிப்பாக, சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட தேதியில் ரூபா பணியில் இல்லை என்றும், ஊராட்சி பதிவேட்டில் அவர் தனது கையால் பதிவு செய்து கையெழுத்திட்டிருந்ததன் மூலம் தெரியவந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டன.

இதன் அடிப்படையில், புகாரில் உண்மைத் தன்மை இல்லை என முடிவு செய்யப்பட்டு, வழக்கு ‘Mistake of Fact’ என முடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபா மீது பதிவு செய்யப்பட்ட PCR வழக்கு உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ரூபா மீதான புகார் உண்மைக்குப் புறம்பானது என்றும், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட பணி நீக்க நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகள் நேரடியாக கள விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும் கோரி ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண்: 355/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவோ அல்லது முழுமையாக முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கு எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்றும், காவல்துறையினரால் சட்டப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது காவல்துறை தரப்பில் வெளியாகியுள்ள இந்த விளக்கம் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர