அரசு கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "மதுரை மாவட்டத்தில் டாஸ்மார்க் விற்பனையாளராக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். டாஸ்மார்க் நிறுவனத்தில் நடைபெற்று வரும் மாமூல் வசூல் குறித்து புகார் அளித்தோம். ஊடகங்களிலும் பேட்டி அளித்திருந்தோம். டாஸ்மார்க் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் பேட்டியளித்ததாக எங்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மார்க் மேலாளர் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மனுதாரர்கள் மதுரை மாவட்ட டாஸ்மாக்கில் பணிபுரிகின்றனர். மதுரை மாவட்ட டாஸ்மார்க் மேலாளராக பணியில் இருந்த ராஜேஸ்வரியும், திருமங்கலம் டாஸ்மார்க் மேற்பார்வையாளராக பணியில் இருந்த செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள். இதனால் டாஸ்மார்க் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் புகார் அளித்தனர். புகாரில் நடவடிக்கை இல்லாததால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்" என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி, ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். இது குறித்த அவர்களின் உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் மனுதாரர்கள் ஊடகங்களுக்கு சென்று பேட்டி அளித்துள்ளனர்.
இது டாஸ்மார்க் விதிகளுக்கு எதிரானது என்றாலும், இதே நேரத்தில் மேலாளர் ராஜேஸ்வரி உடனடியாக அவர் பணிபுரிந்த துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது டாஸ்மார்க் நிறுவனத்தில் ஏதோ நடக்கின்றது.
அரசு கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே மதுபானத்தை அரசு விற்பனை செய்கிறது. இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது.
ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. டாஸ்மார்க் துறை தன் தவறுகளை உணர வேண்டும்" என குறிப்பிட்டு, மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.