தமிழ்நாடு

மதுரை: இடிந்து விழும் அபாயத்திலுள்ள வீடுகளில் வாழும் மக்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

நிவேதா ஜெகராஜா

மதுரையில், சிதலமடைந்த வீட்டுக்குள் வாழும் அவலத்துக்கு உள்ளாகிவருகின்றனர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள். அரசின் உதவி கோரி காத்திருக்கின்றார்கள் அவர்கள். 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சேக்கிபட்டி ஊராட்சியில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 72 காலனி வீடுகள், 40 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய தமிழக அமைச்சர் கக்கனால் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 1996 ஆம் ஆண்டில் 40 தொகுப்பு வீடுகள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதன் பிறகு வருடங்கள் ஓடத்தொடங்கிவிட்டன; வீடுகளும் வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக இந்த காலணி வீடுகளும், தொகுப்பு வீடுகளும் பெரும் சேதங்களை சந்தித்து வருகின்றது. இதனால் மக்கள் வாழ தகுதியற்ற நிலைக்கு அந்த வீடுகள் தள்ளப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொட்டாம்பட்டி ஒன்றியத்தை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ் சேகரை, அப்பகுதியை சேர்ந்த ஆதி திராவிடர்கள் காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இல்லத்துக்கு அழைத்துச்சென்று அதன்நிலையை பார்வையிட வைத்தது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்போது ஆட்சியர், “பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை புதிதாக அரசே கட்டிக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” என மக்களிடம் தெரிவித்தார். ஆனால் அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பயணாளர் கணக்கெடுப்பு, முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக, கிட்டத்தட்ட 287 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் சமீப நாட்களாக பழுதடைந்துள்ள வீடுகள் திடீர் திடீர் என இடிந்து விழும் அவலமும் அரங்கேறி வருகின்றது. இதனால் மக்கள் தொகுப்பு வீடுகளை விட்டு வெளியேறி அருகாமையில் சாலையோரங்களில் வசித்துவரும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மதுரை கீழவெளி வீதியில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, மாவட்டத்தில் உள்ள பழைய கட்டடங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகின்றது. இந்தச் சூழலில் கொட்டாம்பட்டி ஆதிதிராவிடர் மக்களின் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது, மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளது. தங்கள் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து, பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

- இரா.நாகேந்திரன்