தமிழ்நாடு

மதுரை ஆணவப் படுகொலை குறித்து விசாரணை

மதுரை ஆணவப் படுகொலை குறித்து விசாரணை

webteam

மதுரையில்‌ சாதி ஆணவப் படுகொலை குறித்து தேசிய ஆதிதிராவிட ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் பாண்டிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் இருளாண்டி என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், இருளாண்டி, மூடை தூக்கும் கொத்துக்கம்பியை வைத்து பாண்டி அவரது மனைவி கச்சம்மாள் ஆகியோரை தாக்கியுள்ளார். இருவரும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கச்சம்மாள் 26ஆம் தேதி உயிரிழந்தார். 

இதையடுத்து கொலையாளி இருளாண்டியை கைது செய்ய வேண்டும், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த கச்சம்மாள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியிறுத்தி 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய மூத்த விசாரணை அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் கச்சம்மாளின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தியதோடு, அரிசி, சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். பின்னர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாண்டியையும் சந்தித்து விசாரித்தனர்.