மதுரை அருகே 16 வயது மகளை சிலர் கடத்தியதாகக் கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூதக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி. இவருடைய கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தன்னுடைய 16 வயது மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மருது என்ற இளைஞர் தன்னுடைய மகளை கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் தன் மகளை கண்டுபிடித்து தராமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம்சாட்டிய நாகமணி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார்.
இந்நிலையில், திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.