தமிழ்நாடு

மதுரை: பசியால் பரிதவித்த குதிரைகளுக்கு பாசத்தோடு உணவளித்த மளிகை கடைக்காரர்

kaleelrahman

மதுரையில் போதிய வருவாய் இன்றி தவிக்கும் குதிரை வளர்ப்போரின் குதிரைகளுக்கு இலவசமாக மளிகை கடைக்காரர் தீவனம் வழங்கி வருகிறார்.

கொரோனா தொற்றால் கோயில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் இல்லாததால் சாரட் வண்டிகளுக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளின் பயன்பாடும் முற்றிலும் தவிர்க்கப் பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் இன்றி குதிரைகளை பராமரிப்பதில் அதன் உரிமையாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

இந்நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் மளிகை கடை நடத்திவரும் தங்கபாண்டியன் என்பவர், நரிமேடு பகுதியில் விசேஷங்களுக்கு பயன்படுத்தப்படும் வளர்ப்பு குதிரைகள் வைத்திருந்த முத்தையா என்பவர் போதிய வருவாய் இன்றி குதிரைகளை பராமரிக்க வழியின்றி விற்றதை அறிந்து, தனது மளிகை கடைக்கு குதிரையுடன் வருபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான தீவனத்தை வழங்குவதாக சுவரொட்டிககளை ஒட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து குதிரை உரிமையாளர்கள் பலரும் இவரது கடைக்கு வந்து குதிரைக்கு தேவையான தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இதேபோல் மாவட்ட நிர்வாகமும் குதிரை வளர்ப்புக்குத் தேவையான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க முன்வரவேண்டும் என குதிரை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.