மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த டிஎஸ்பி வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாசி வீதி பகுதியான கீழ ஆவணி மூல வீதி பகுதியில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தேனி மாவட்ட சமூக நீதி தீண்டாமை தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வாகனத்திற்கு 500ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிமனைக்கு பழுது நீக்க கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் பழுது பார்க்கப்பட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக கீழ ஆவணி மூல வீதி பகுதிக்கு காவலர் ஒருவரால் கொண்டு செல்லப்பட்டு, அங்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அவதியடைந்த வாகன ஓட்டிகள் அந்த வாகனத்தை போட்டோ எடுத்து காவல் துறையினருக்கு அனுப்பியுள்ளனர். அதனையடுத்து அந்த அரசு வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.