தமிழ்நாடு

“பேராசிரியர் திட்டியதால் இந்தமுடிவை எடுத்தேன்” நடவடிக்கைஎடுக்க மாணவியின் பெற்றோர் கோரிக்கை

“பேராசிரியர் திட்டியதால் இந்தமுடிவை எடுத்தேன்” நடவடிக்கைஎடுக்க மாணவியின் பெற்றோர் கோரிக்கை

kaleelrahman

மதுரையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு காரணமான கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பத்மபிரியா. இவர், மதுரை வசந்த நகர் பகுதியில் உள்ள பிரபலமான அரசு உதவி பெறும் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று பத்மபிரியா கல்லூரிக்கு சென்றபோது, மதியம் கணிதத் துறை பேராசிரியர் முத்துக்குமார் வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது மாணவி பத்மபிரியாவை மற்ற மாணவ , மாணவிகள் முன்னிலையில் அவதூறான வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், வீட்டில் யாரிடமும் இது குறித்து சொல்லாமல் விஷத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது பேராசிரியர் என்னை அவதூறாக திட்டியதால் விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் என்னை மன்னித்து விடுங்கள் என அவரது குடும்பத்தாரிடம் மாணவி கூறியதாக அவரது தந்தை செல்வக்குமார் கூறுகின்றார். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பத்மபிரியா தற்கொலைக்கு காரணமான கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுவை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.