தமிழ்நாடு

மதுரை: மழை வேண்டி மதுபாட்டிலுடன் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோழிக்கறி படையல் விழா

kaleelrahman

மேலூர் அருகே மழை வேண்டி மதுபாட்டில்களுடன் கோழிகறி விருந்து வைத்து, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது எட்டிமங்களம். இங்குள்ள உடலத்திகண்மாய் கரையில் உள்ள பழமையான சக்கிவீரன் கோயிலில், மதுபாட்டில்களுடன் சேவல் கோழிக்கறி விருந்து வழங்கி, மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய விழா ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்றது.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய ஏராளமான சேவல்கள் பலியிடப்பட்டு கோழிக்கறி மண் பானைகளில் சமைக்கப்பட்டது. பின்னர், கோயிலில் மதுபாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டு கோழிக்கறி படையலிடப்பட்டது. பாரம்பரிய வழக்கப்படி பூசாரி பூஜைகள் செய்த பின்னர், பக்தர்களுக்கு மதுபாட்டில்களுடன் கறிவிருந்து வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மது பழக்கம் உடையோருக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது. அவர்கள் மது குடித்து கறிவிருந்தில் கலந்து கொண்டனர். முன்னோர்கள் நடத்தியபடி மழைவேண்டி இந்த விழா கொண்டாடப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.