செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரையில் விற்பனைக்காக குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக மாட்டுத்தாவணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி சார்பு ஆய்வாளர் தியாகப்பிரியன் தலைமையில் போலீசார் மதுரை - சென்னை பைபாஸ் சாலையில் மூட்டைகளுடன் நின்றவர்களிடம் விசாரணை செய்ததோடு சோதனையும் செய்தனர்.
அப்போது மூட்டைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார். அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை கோ.புதூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், அனீஸ் முகம்மது மற்றும் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சையது அபுதாஹிர், சையது அப்துல்ரஷித் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் நாலவரையும் கைது செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரையில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக கடத்திவந்து மறைத்து வைத்திருந்த 246-கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இரைதயடுத்து அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.