செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரையில் இயங்கும் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் மற்றும் கிண்டர் கார்டன் கேர் என வேலைக்குச் செல்லும் பெற்றோர் குழந்தைகளை கவனித்து கொள்ளும் மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மழலையர் பள்ளியின் உரிமையாளராக திருநகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவர் உள்ளார்.
இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த அமுதன் - சிவ ஆனந்தி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆருத்ரா (3) இங்கு கோடைகால பயிற்சி முகாமிலும், பங்கேற்று வந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த சிறுமி பள்ளிக்கு பின்புறம் நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஆசிரியர்கள் குழந்தையை கவனிக்காத நிலையில் அஜாக்கிரதையாக திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியில் சிறுமி விழுந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட நிலையில், சிறுமியை தேடியுள்ளனர். அப்போது சிறுமி தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கியது தெரியவந்துள்ளது. உடனடியாக சிறுமியை மீட்ட ஆசிரியர்கள், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஒருமணி நேர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளியில் தெற்கு காவல் துணை ஆணையர் அனிதா விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஸ்ரீ இளம் மழலையர் பள்ளிக்கு காவல் துணை ஆணையர் அனிதா, வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, பள்ளி கல்வி அலுவலர் ரேணுகா ஆகியோர் சீல் வைத்தனர். இந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க பேசியதை இந்த வீடியோ காணொளியில் பார்க்கலாம்