தமிழ்நாடு

"சாலைனா சிக்கனல் இருக்கும், வாழ்ககைனா சிக்கல் இருக்கும்" - அசத்தும் மதுரை டிராபிக் போலீஸ்!

Veeramani

போக்குவரத்து காவலர்களை கண்டாலே வாகன ஓட்டிகள் மிரண்டு வேறு திசையில் செல்ல கூடிய சூழலில், மதுரை மாநகரில் உள்ள ஒரு போக்குவரத்து சார்பு ஆய்வாளரின் வாழ்க்கை தத்துவம் தொடர்பாக உத்வேகமான பேச்சால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னல்களில் மகிழ்ச்சியுடன் அவரது பேச்சைக் கேட்டு, அவருக்கு மரியாதை செலுத்தி செல்கின்றனர்.

இவரின் சிறப்பான பணி குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அதனைப் பார்த்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் பழனியாண்டியை போனில் அழைத்து வாழ்த்து கூறியதுடன், மதுரைக்கு வரும்போது நேரடியாக விருது வழங்குவதாகவும் கூறியதால் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்

இயந்திரமயமான இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது பணிகளுக்காக நிற்காமல் சுழன்று கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் மாநகர் பகுதியில் சிக்னல்கள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்து அனுப்பி வருகின்றனர்.

இதில் வித்தியாசமாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றக் கூடிய பழனியாண்டி என்ற சார்பு ஆய்வாளர், மதுரை மாநகர் பகுதியில் உள்ள மேலமடை மற்றும் பால்பண்ணை சிக்னல்களில் அவர் பணியில் இருக்கும் போது ஒலிபெருக்கிகளில் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை அவரது பாணியில் அறிவுறுத்தியும், வாழ்க்கையில் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியும் அனவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

வாகனம் ஓட்டிச் செல்லும் போதும், வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்துச் செல்வதால் என்ன நன்மைகள் ஏற்படும், குறிப்பாக பெற்றோரிடம் உடன் பிறந்தவர்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும், கட்டிய மனைவியிடமும் காலம் முழுவதும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும், குடும்பத்தில் ஜெயிக்க நினைத்தால் வாழ்க்கையில் தோற்று விடுவோம் எனவும், வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் உடல் அலுப்பு ஏற்படும் அளவிற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், ஒவ்வொரு மனிதனும் நன்றாக உழைத்தால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற தத்துவங்களை மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் எடுத்துக் கூறி வருகிறார் பழனியாண்டி.

மேலும், தலைக்கவசம் அணிவது மற்றும் சீட் பெல்ட் போடுவதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் இந்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர் பழனியாண்டி தொடர்ந்து ஒலிபெருக்கியில் கூறி வருகிறார்.

ஒரு மனிதனின் ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகள் மட்டுமே ஒரு மனிதன் உழைப்பதற்கு நேரம் உள்ளதாகவும், அதே போன்று ஒரு மனிதன் தூங்குவதற்கு அவரது ஆயுட்காலத்தில் 13 ஆண்டுகள் செலவாகிறது எனவும் 5 1/2 ஆண்டுகள் ஒரு மனிதன் மருத்துவமனைகள், வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது என்பது போன்ற தத்துவம் மிக்க விழிப்புணர்வுடன் கூடிய செய்திகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்கி வருகிறார். இவரது சிறப்பான பணியை வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது தமிழக காவல்துறை டிஜிபியும் வாழ்த்தியுள்ளார்.