பேனர், உயர் நீதிமன்றம்
பேனர், உயர் நீதிமன்றம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விதிமீறி பேனர்... அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - நீதிமன்றம் கேள்வி

Prakash J

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

பேனர் விபத்து

அப்போது, டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறிச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”இந்த சம்பவங்கள் தொடரபாக பதியப்பட்ட குற்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்” என்றனர். ”அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்படுகின்றன” எனக் கூறிய நீதிபதிகள், விழுப்புரத்தில் சிறுவன் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, ”கட்சிகளின் பெயரில் கொடிக்கம்பங்கள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும்” என்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

இதற்கு விழுப்புரம் சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் தரப்பில், திமுக சார்பில் ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிரான குற்றவழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.