உயர்நீதிமன்றம், துரைமுருகன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகனுக்கு புதிய சிக்கல்.. அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

PT WEB

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

துரைமுருகன்

1996-2001-ம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002இல் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013இல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வேல் முருகன், 1996-2001ஆம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.