ponmudi, chennai hc PT Web
தமிழ்நாடு

பொன்முடி மீதான வழக்கு | காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் காவல் துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

PT WEB

பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இது வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், பொன்முடிக்கு எதிராகக் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீதான புலன் விசாரணை நிலுவையில் உள்ளது என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார் எனவும் தெரிவித்தார்.

chennai HC, ponmudi

இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்யத் தயங்கினால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என நீதிபதி எச்சரித்தார். மேலும், அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும், கருத்துச் சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை கூறி இருக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.