தமிழ்நாடு

ஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்

ஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்

webteam

ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.

ஆனால், சுயநினைவுடன் இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சரவணன் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில்,  ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்துள்ளார். மேலும் கைரேகை விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளை கடுமையாக நீதிபதி சாடினார். அவர் தனது தீர்ப்பில் கொடுத்த முக்கிய அம்சங்களை காணலாம்.

  • வேட்பு மனுவில் ஜெயலலிதா சுய நினைவுடன் கைரேகை வைத்தார் என்பதற்கான நேரடி சாட்சியங்கள் இல்லை
  • ஜெயலலிதாவை தான் மட்டுமே சந்தித்ததாக டாக்டர். பாலாஜி கூறினார். ஆனால் அவரை சந்திப்பதற்கு முன்னதாகவே வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அப்படியானால் டாக்டர் பாலாஜி கைரேகையை வாங்கவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
  • ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யாருமே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை எனக்கூறப்பட்டுள்ள நிலையில் டாக்டர். பாலாஜி மட்டுமே தனியாக சந்தித்தார் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
  • ஜெயலலிதா கைரேகை தொடர்பான விவகாரங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஜெயலிலிதாவின் உடல்நிலை கருதியே அந்த வாதத்தை எடுக்காமல் வேட்புமனு விவகாரத்தை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
  • ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கைரேகை விவகாரத்தில் நீதிமன்றம் உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்க முடியும்.
  • தேர்தல் படிவம் ஏ மற்றும் பி யில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பெற்றதும், அதை ஒரே கடித்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததும் சட்ட விரோதம். இது கடுமையான கண்டனத்துக்குரியது.
  • அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது கடமைகளை மறந்து கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டிருக்கிறார்.
  • தேர்தல் அதிகாரியின் அழுத்தத்தால் குறைகளுடனான வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியும் வழிநடத்தப்பட்டுள்ளார்.
  • ஏ.கே.போஸை அங்கீகரித்து அளிக்கப்பட்ட வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது. அதனால் வெற்றியும் செல்லாது