தமிழ்நாடு

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

rajakannan

எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிடப்பட்ட கருத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்த அவரது முகநூல் பதிவை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், முன் ஜாமீன் தொடர்பான வழக்கு கோடைகால முதல் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறினார்.