தூய்மை பணியாளர்கள் கைது web
தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் போராட்டம்| நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய தேவை என்ன?

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 13 நாட்களுக்கு பிறகு, நள்ளிரவில் அரங்கேறிய கைது நடவடிக்கை, தள்ளுமுள்ளு, சாலைமறியல் என பரபரப்போடு முடிவுக்கு வந்தது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

இரவு பகலாக மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல், “தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது” ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதற்காக தூய்மை பணியாளர்களும், அதற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

வழக்கறிஞர்களை விடுவிக்க வேண்டும்..

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், குமாரசாமி, ஆர் கிருஷ்ணகுமார், வேல்முருகன் உள்ளிட்டோர், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய தேவை என்ன? கைது செய்யப்பட்டவர்களை பார்க்ககூட அனுமதியில்லை. நாளை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூட சொல்வார்கள் என வாதிட்டனர். மேலும் வழக்கறிஞர்களை கைது  செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் நீதிபதிகளிடம்  காண்பித்தனர்.

தூய்மை பணியாளர்கள் கைது

காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன், பேருந்துகளை சேதப்படுத்தியதாகவும், பெண் காவலர்களை தாக்கியதாகவும் ஆறு வழக்கறிஞர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கலைந்து செல்ல மறுத்ததால் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை என்றால் மட்டுமே அது சட்டவிரோத காவல். வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கைது செய்த பிறகுதான் பேருந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு எந்த காரணங்களும் இல்லை, ஆறு வழக்கறிஞர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் நிபந்தனைகளுடன் கூடிய விரிவான உத்தரவு ஒரு மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.