பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த பேச்சு தொடர்பாக பொன்முடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், விவகாரம் பூதாகரமாவதால் அமைச்சர் பதவியும் பறிபோகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். வனத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடியின் சமீபத்திய மேடைப் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அதில் விலைமாது குறித்து சர்ச்சையாக பேசிய பொன்முடி, சைவம், வைணவம் என்று உதாரணம் கூறியது பல தரப்பினரிடையேயும் கொதிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் பங்கேற்றிருந்த அந்த பொதுக்கூட்டத்தில், அவர்கள் முன்னிலையிலேயே மேடையில் நின்று ஒரு அமைச்சர் இப்படி ஆபாசமாக பேசலாமா என்றும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க, அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதன்படி, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த பொன்முடி அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
மாற்றுக்கட்சிகளில் துவங்கி கூட்டணி கட்சிகள் வரை இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் பொன்முடி. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது அமைச்சர் பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட்ட நீதிபதி, அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து, மாலை இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நான்கைந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நீர்த்துப்போக செய்யாமல், ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, அமைச்சர் பொன்முடி எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இப்படியாக பொன்முடியின் சர்ச்சை பேச்சு பூதாகரமாக வெடித்துள்ளதால், அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்தா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆம், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பும் எதிராக வரும் பட்சத்தில், இதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவுக்கு திமுக தள்ளப்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.