பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என பதிவுத் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள், சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்துள்ள விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அந்த விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை என அமைச்சர் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிர்ஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டார். வெறுப்பு பேச்சு தொடர்பாக அமைச்சருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.