குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஓய்வுப் பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளைக் காப்பாற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையம் நினைப்பதாகவும் , எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருவதாக, மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் எந்தத் தொய்வும் இல்லை என்றும், மனுதாரரின் கோரிக்கை அடிப்படை ஆதரமற்றது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.