பேருந்து, சென்னை உயர் நீதிமன்றம் pt desk
தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வு | நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி உயர்மட்டக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V M சுப்பையா

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

govt buses

அந்த மனுக்களில், “கடந்த 2018ம் ஆண்டு பேருந்துகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போது, டீசல் லிட்டருக்கு 63 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அது 92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 1.10 ரூபாயும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிட வேண்டும். மேலும் ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் அடங்கிய உயர்மட்டக் குழு, நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Court order

தொடர்ந்து, “உயர்மட்டக் குழு, அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, கட்டணம் நிர்ணயிப்பது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்” என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக, அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று, நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்” என உயர்மட்டக் குழுவுக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.