High Court, Seeman pt desk
தமிழ்நாடு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.

Chennai High court

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை” என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, “பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். ஆனால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது” எனக் கூறி, சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.