தமிழ்நாடு

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: மூன்று தரப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் 

webteam

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில் காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட மூன்று தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

பள்ளிக்கரணை காவல்நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் ஆர். அழகு தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், சம்பவம் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெயகோபாலின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

இதேபோன்று மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பிலும் அறிக்கைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்று தரப்பிலுமே, பேனர் வைத்த ஜெயகோபால் முன்னாள் கவுன்சிலர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர், அதிமுகவைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை வரவேற்று பேனர் வைத்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. ஜெயகோபால் தனது உறவினர்களுடன் சேர்ந்து பேனர் வைத்ததற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.