சென்னை உயர்நீதிமன்றம் முகநூல்
தமிழ்நாடு

5 தொகுதிகளில்.. இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Premkumar S

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார் முதல்வர் விஜய். இதன்மூலம், திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கார் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்ட நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியுடன் கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட 7 தொகுதிகள் தற்போது தமிழ்நாட்டில் காலியாகவிருக்கிறது.

தேர்தல் ஆணையம்

இந்தசூழலில், இந்த 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், வேட்பாளர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என பாளையங்கோட்டையைச் சார்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் இருந்து தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, இடைத் தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. எனவே, இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

தொடர்ந்து, அரசு தரப்பில் இருந்து, வேட்பாளர்களின் ராஜினாமாவை உரிய ஆய்வுக்குப் பின் சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இந்த வழக்கில் உத்தரவிட்டால் தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் விஜய் தரப்பில் இருந்து வாதாடிய வழக்கறிஞர், ”இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் மட்டுமே வழக்கு தொடர உரிமை உள்ளது. மனுதாரர் எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கை தொடர்ந்துள்ளார்” என வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ”தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தலில் புதிய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெற்றிக்கு எதிராகவும் வழக்கு தொடர வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடைவித்ததுடன், இவ்வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்றச் செயலர், முதல்வர் விஜய் ஜூலை 31-க்குள் பதில்தர உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.