ஹெச்.ராஜாவை கைது செய்து, மனநல பரிசோதனைக்கு உட்படுத்த கோரும் புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் வகையில் பேசிக்கொண்டும், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசி கொண்டிருப்பதால், ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திருவேற்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கடந்த 7ஆம் தேதி இந்தப் புகாரை அளித்தார்.
ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். தனது புகார் மீது காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தனது மனுவில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் புகார் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். வழக்கு குறித்து காவல்துறையின் விளக்கம் பெற்று, நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.