பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்த மனைவிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்ற குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக விவாகரத்து பெற்ற மனைவி ஒருவர், தன் முன்னாள் கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறுமியை அழைத்து விசாரித்தபோது அது பொய் புகார் எனக் கண்டறிந்தது. பின் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த நீதிமன்றத்திலும், விசாரணை நீதிமன்றத்திலும் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், தந்தைக்கு எதிராக பொய் புகார் அளித்ததாகக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுதாரருக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
குழந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக தாய், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது குறித்து நீதிபதி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, முன்னாள் கணவரை பழிவாங்க பொய் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் என்றும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.