தமிழ்நாடு

மக்களின் சிரமங்கள் புரியவில்லையா?: நீதிபதிகள் கேள்வி

rajakannan

மக்களின் சிரமத்தை கணக்கில் கொள்ளமாட்டீர்களா? என்று தமிழக அரசு, தொழிற்சங்கங்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது அரசு அறிவித்த 2.44 காரணியை தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளத் தயார் ஆனால் அரசு ஒப்பந்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பேச்சு வார்த்தைக்கான தேதியை மத்தியஸ்தர் முடிவு செய்யலாம் என்று கூறினர்.

இதனையடுத்து, “போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேலைநிறுத்தக் காலத்திற்கு ஊதியம் வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கூடுமான வரை ஓய்வு பெற்ற உடனே தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது, மத்தியஸ்தருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ‘வேலை நிறுத்தக் காலத்தில் சம்பளம் வழங்கப்படாது. பேச்சு வார்த்தைக்குதான் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு காரணிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை’ என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

நிலுவைத் தொகையை வழங்க நீதிமன்றத்திற்கு துணிவில்லை என்று கூறிய தொமுச பொதுச்செயலாளர் சண்முகத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தொழிற்சங்க நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். பொதுமக்கள் படும் சிரமத்தை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை. தொழிலாளர்கள் பிரச்னைக்காகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஏற்பதும், மறுப்பதும் தொழிற்சங்கங்களின் விருப்பம். 
வழக்குகளை நீதிமன்றம்தான் கிடப்பில் போட்டுள்ளதா? கடந்த 6 மாதமாக நிலுவைத் தொகை வாங்கி தருவதில் எப்படி பணியாற்றுகிறோம் என்று தெரியாதா?” என்று தெரிவித்தனர்.