அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி pt web
தமிழ்நாடு

“பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

Angeshwar G

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்றவர் பொன்முடி. இவர் பொறுப்பேற்கும் போது அவரது சொத்து மதிப்பு ரூ.2.71 கோடியாக இருந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ. 6.27 கோடியாக உயர்ந்துள்ளது என 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டது.

Ponmudi

இந்த வழக்கில் 1.7 கோடிக்கு அவரால் கணக்கு காட்டமுடியவில்லை என்பது வழக்கு. அப்போது பொன்முடியின் சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடக்கம் செய்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதில் வழக்கு பதிவு செய்த நிலையில், ஏறத்தாழ 5 வருடம் இந்த வழக்கு நடந்துவந்தது. அதில் 2016 ஆம் ஆண்டு பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களின் முடக்கத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தாண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி அனைத்து விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பொன்முடியை விடுவிக்கும் சிறப்பு நீதிமன்ற ஆணையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தண்டனையில் வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அபராதமாக தலா ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடியின் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக ஒரு மாதத்திற்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொத்துக்கள் முடக்கத்தை ரத்து செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீண்டும் சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டே அப்பீல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பொன்முடி சொத்துக்களை மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'பொன்முடி சொத்தை முடக்க அவசியமில்லை' - சென்னை உயர்நீதிமன்றம் MadrasHighCourt | Ponmudi

தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.