எம்.பி ஆ.ராசா - அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி
எம்.பி ஆ.ராசா - அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி PT
தமிழ்நாடு

“அமைச்சர், எம்.பி-யின் சனாதன பேச்சுகளுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவும்” - உயர்நீதிமன்றம்

PT WEB

திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மற்றும் எம்.பி. ஆ.ராசா ஆகியோரின் சனாதன பேச்சுகள் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து முன்னணியை சேர்ந்த மனுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், “சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது. அதை ஒழிக்க வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி பேசினார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K.சேகர்பாபுவும் பங்கேற்றார். மற்றொருபக்கம் திமுக எம்.பி ஆ.ராசாவும் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகிறார்.

இந்த நிலையில், “இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்” என இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவாரண்டோ மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் என்பவர் சேகர் பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் என்பவர் ஆ.ராசாவிற்கு எதிராகவும், மாநில செயலாளர் T. மனோகர் என்பவர் உதயநிதிக்கு எதிராகவும் கோ வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

madras high court

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி மற்றும் ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.வில்சன், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் புறம்பானதல்ல. அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களின் பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டார்.

சேகர் பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் N.ஜோதி, “குற்றச்சாட்டு கூறப்படும் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூவரின் பேச்சு குறித்த ஆதாரங்களையும் தாக்கல் செய்ய இந்து முன்னணியை சேர்ந்த மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.