தமிழ்நாடு

"மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் தீர்வு" - அரசு கேபிள் சேவை விவகாரத்தில் கோர்ட் உத்தரவு

webteam

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று கேபிள் மென்பொருள் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்க செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் மும்பை அடிப்படையாகக் கொண்டு மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் மற்றும் பாலாஜி மிசின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி 614 கோடி ரூபாய் மதிப்பில் 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, நிர்வகிக்கும் சேவைகளை வருடாந்திர அடிப்படியில் செய்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனங்கள் காலதாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 52 கோடி ரூபாய் பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகை தொடர்பாக ராஜன், அரசுக்கு கடிதம் அனுப்பியும் தொகை வராததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர். இந்த நிலையில், அரசு கேபிள் டிவி சேவை துண்டிப்பு தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் முறையீடு செய்யப்பட்டது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீனிதிரன் ஆஜராகி, சேவை மென்பொருளை பராமரித்து வழங்கி வரும் இரு நிறுவனங்களுடன், அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக கூறி, அது தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கட்டணம் தரவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்க கூடாது என்றும், மத்தியஸ்தர் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி, அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக முடக்கப்பட்ட கேபிள் டிவி சிக்னலை உயர்நீதிமன்றத்தின் அவசர வழக்கில் உரிய உத்தரவுகளை பெற்று உடனடியாக கேபிள் டிவி நிறுவனம் சீரமைத்து விட்டதாகவும், தற்போது மாநிலம் முழுவதும் கேபிள் டிவி சிக்னல்கள் பெறப்பட்டு முறையாக இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.