பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 வரை கைதுசெய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக அந்த நடிகை புகார் அளித்திருந்தார். நடிகையின் புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் ராமநாதபுரம் சென்றபோது, அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மணிகண்டன் நேற்று முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை தரப்பில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இன்று மணிகண்டன் அளித்த புகார் மட்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுவதால் அவரை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நடிகை தாக்கல் செய்த மனு பார்வைக்கு வராததால் வழக்கை 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் புகாரளித்த நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டது. அதுவரை மணிகண்டனை கைதுசெய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.