வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கடந்த 2005-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்பே விசாரிக்க முடியாமல் போனது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய நாடார் பேரவையின் தலைவராக இருந்த வெங்கடேச பண்ணையார், கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி காவல் துறையால் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி அவரது மனைவி ராதிகா செல்வி கடந்த 2005-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு சிபிஐ அல்லது சிபிசிஐடி போன்ற அமைப்பின் விசாரணைக்கு உகந்ததுதான் என நீதிபதிகள் தெரிவித்தனர். அவ்வாறு செய்திருந்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைக்க செய்திருக்கலாம் என கூறினர்.
ஆனால் இவ்வளவு காலதாமதத்திற்கு பிறகு வழக்கை சிபிஐக்கு மாற்றுவது விரைவான விசாரணை என்ற அரசியலமைப்புச் சட்ட விதிக்கு எதிராக அமையும் எனக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் முன் 4 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த வழக்கு உரிய நேரத்தில் விசாரிக்கப்படவில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
வழக்கை தொடர்ந்தவர்களுக்கு முறையாக நீதி கிடைக்கவில்லை என கூறிய நீதிபதிகள் வழக்கை தொடர்ந்த வெங்கடேச பண்ணையாரின் மனைவிக்கும், மற்றொரு மனுதாரருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.