காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை மூடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடமாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதுடன் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 17 குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பல குழந்தைகளுக்கு ’கோல்ட்ரிஃப் சிரப்’ இருமல் மருந்தை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அம்மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளரான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பின்னர் ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் இறந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது, பின்னர் ஆய்வகச் சோதனைகளில் ஆன்டிஃபிரீஸ் மற்றும் பிரேக் திரவங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமான டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சிரப்பில் 48.6 சதவீதம் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது, இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் உட்கொண்டால் மரணத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படும் ஒரு நச்சு இரசாயனமாகும். இதன்பேரிலேயே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் 17 குழந்தைகள் உயிரிழக்கக் காரணமான நச்சுத்தன்மை வாய்ந்த 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்பைத் தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரேசன் மருந்து நிறுவனம் 14 ஆண்டுகளாக விதிகளை மீறி இயங்கி வந்துள்ளது. 2011க்குப் பின் தனது உரிமத்தைப் புதுப்பிக்காத ஸ்ரேசன் நிறுவனம், சுகாதாரமற்ற நிலையில், முறையான வசதிகளின்றி மருந்துகளைத் தயாரித்துள்ளது. மத்தியப் பிரதேச மருந்துக் கட்டுப்பாட்டாளர் கடிதம் அனுப்பிய பின்னரே, தமிழக அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில்,மருந்துக்கான மூலப்பொருட்கள் வாங்குதல் முதல் பேக்கிங் வரை 364 முக்கிய விதிமீறல்கள் இருப்பது ஆய்வுக்குப் பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிரப்பில் 48.6% டையெதிலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, மருந்து கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.