வைகை நதிக்கரை நாகரிகத்தின் வரலாற்றுத் தடயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், சாதிய ரீதியிலான பாகுபாடுகளும் நம்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ’சாதி இரண்டொழிய வேறில்லை’ என்று ஒளவையார் தொடங்கி ’சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாரதியார் வரை சமத்துவ ஒளியைப் பாய்ச்சிய போதும், ’இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!’ என்று வியப்புடன் பாரதிதாசன் கேட்டபின்னும் சாதியின் அவலங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த காலங்களில் இருப்பதுபோல் இல்லாமல், இன்று பலவகையில் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேறிவரும் வேளையில், சில தருணங்களில் நடைபெறும் சம்பவங்கள் நாம் வெட்கித் தலைகுனியும் வகையில் அமைந்துவிடுகிறது.
சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக சினிமா எனும் ஆயுதமும் தன்னுடைய கத்தியை கூர்தீட்டிக் கொண்டுதான் இருக்கிறது. சினிமா தொடங்கிய காலம்முதலே சாதியத்திற்கு எதிரான படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில் சமீபகாலமாக பல்வேறு படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சாதியப் பாகுபாடால் அரசியல் கட்சிகளில் பட்டியலின தலைவர்கள் படும்பாடுகளை மையமாகக் கொண்டு ’மாமன்னன்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பே, ‘தேவர் மகன்’ குறித்த மாரிசெல்வராஜின் பேச்சு விவாதப்பொருளானது. பல நாட்கள் அந்த விவாதம் சென்று மாரி செல்வராஜ் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் பாசிட்டிவான தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் பட்டியலின தலைவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், திமுகவைப் பிரதிபலிக்கும் வகையில் படத்தில் வரும் கட்சியின் மீதுதான் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஆனால், அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தில் எப்படி நடித்தார் எனப் பலரும் வியப்பாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். படம் தொடர்பாக, தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இயக்குநர் பா.ரஞ்சித் வைத்த விமர்சனம், அதற்கு உதயநிதி தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம், எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர்கள் எனப் பலரும் இந்தப் படம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
படம் வெளியான ஒருவாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளானது வடிவேலு நடித்த ’மாமன்னன்’ கதாபாத்திரம் தான். அதாவது வடிவேலு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவராக (எம்.எல்.ஏ) காட்சிப்படுத்தப்பட்டு இறுதியில் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். வடிவேலுவின் கதாபாத்திரம் முந்தைய அதிமுக ஆட்சியில் சபாநாயகர் ஆக இருந்த தனபாலின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பேரவைத் தலைவராகச் ஆக்கப்பட்டவர் தனபால். இதுதொடர்பாக தனபாலுவே பல்வேறு பேட்டிகளில் தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.
அதற்குக் காரணம், தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தனபால் நிகழ்ச்சியொன்றின்போது தன் வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ததாகவும் அவர் பட்டியல் இனத்தைச் (அருந்ததியர்) சேர்ந்தவர் என்பதால் கட்சியினர் அந்த விருந்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி பற்றி விசாரித்த ஜெயலலிதாவிடம், ’கட்சிக்காரர்கள் எல்லாரும் வந்தார்கள். ஆனால், சாப்பிடாமல் போய்விட்டனர்’ என்று தனபால் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதாவது, அவருடைய சாதியைக் காரணம் காட்டி அவர்கள் சாப்பிடமால் சென்றதாகக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட ஜெயலலிதா, உடனடியாக அவருக்கு உணவுத் துறை அமைச்சர் பொறுப்பை வழங்கியதோடு பின், சட்டப்பேரவைத் தலைவராகவும் நியமித்தார் என்று அதிமுக தரப்பில் பெருமையுடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, தனபாலை மதிக்காதவர்கள், அவரை மதிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பேரவைத் தலைவர் பதவியை வழங்கியிருந்தார் என்றும் சமூக நீதியைக் காப்பாற்றியவர் ஜெயலலிதா என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில் திமுக தரப்பிலும் சாதி ஒழிப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு செயல்களைப் பட்டியலிட்டு வருகிறார்கள். சமத்துவபுரம் அமைத்தது, அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு அளித்தது என தாங்கள்தான் சமூகநீதியின் காவலர்கள் என அவர்கள் தரப்பிலும் கூறி வருகிறார்கள்.
இதேபோன்று, தமிழகத்தில் பட்டியல் சமூகத்தின் முதல் சபாநாயகர் ஆக சிவசண்முகம் பிள்ளை என்பவர்தான் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்தார் என்ற தகவல் செய்திகளில் வெளியானது. இத்தகைய சூழலில்தான், தமிழகத்தில் சமூக நீதிக்காக காமராஜர் மேற்கொண்ட அற்புதமான செயல்களை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. குறிப்பாக, தன்னுடைய அமைச்சரவையில் புரட்சியை ஏற்படுத்தியவர், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரத்தில் உட்காரும்போதுதான் அவர்கள் சமூகத்துக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பியவர், காமராஜர். அதனால்தான், மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கக்கன், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த லூர்து அம்மாள் சைமன் ஆகியோரை உயர்ந்த துறைகளில் உட்கார வைத்து நாட்டில் சமூகநீதியை முதன்முறையாகக் கொண்டு வந்தார். அவர்கள் ஏற்கெனவே தங்களது அரிய பல செயல்கள் மூலம் அதற்கான தகுதியுடன் இருந்தனர்.
இதைவிட இன்னொரு விஷயம் மூலம் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறார், காமராஜர்.
ஆம், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனுக்குத் தன் அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறையை (1954ம் ஆண்டு) ஒதுக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார். கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிக்கு, சகல மரியாதைகளையும் வழங்கி கோயிலுக்குள் உள்ளே நுழையும் வழியை அன்றே திறந்தவர் காமராஜர். ஆக, தமிழக அமைச்சரவையில் சமூகநீதியை அன்றே நிலைநாட்டியவர் காமராஜர் என்ற வாதங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கக்கனும் அறநிலையத் துறை அமைச்சராகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பே நீதிக் கட்சியின் ஆட்சி தொடங்கி, காங்கிரஸ், திமுக, அதிமுக என ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒவ்வொரு காலத்திலும் சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்ததன் விளைவாகவே தமிழகம் இன்று பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.