சென்னை மாதவரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் ஜவஹர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர்,1997-ஆம் ஆண்டில் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் மகாகவி பாரதிநகர், சாத்தாங்காடு, திருவான்மியூர், ஆர்கே நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியவர்.
இவர் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2004-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் விருதும், பதவி உயர்வும் ஜவகருக்கு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . அப்போது விருது வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இது குறித்து அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ளது.
இது தொடர்பாக ஜவகர் உள்ளிட்ட பலரும் முதல்வரிடமும், அரசு தரப்பிலும் முறையிட முயன்றும் அவர்களது முறையீட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. அரசின் முடிவு என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கும் சூழலில், அப்போது அங்கீகரித்து விருது கொடுத்த அரசு, இப்போது தங்களை அங்கீகரிக்க மறுப்பது ஏன் ? என்று விருது பெற்ற காவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மூத்த அதிகாரிகளான தங்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர் முதல்வரின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லாமல் தொடர்ந்து அரசு தங்களை அவமானப்படுத்துவதாக ஆய்வாளர் ஜவகர் கூறுகிறார். இதனால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அரசு கொடுத்த பதவி உயர்வு, விருது, ரொக்கப்பணம் மற்றும் வீட்டுமனை ஆகிய அனைத்தையும் முதல்வரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளரின் இந்தப் பதிவு காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஜவகரிடம் கேட்டபோது இந்தப் பதிவுக்காக தம்மிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று வேலையை ராஜினாமா செய்ய உள்ளதாக ஆய்வாளர் ஜவஹர் தெரிவித்தார். வீரப்பன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை என்கவுண்டர் செய்துள்ள இவர், சென்னையில் பிரபல ரவுடிகளான ஆர்கே நகர் பாபா சுரேஷ், மகாகவி பாரதிநகரை சேர்ந்த சுறா சுரேஷ் ஆகியோரை என்கவுண்டர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.